வா, சுகி வாசுகி oleh தேவிபாலா
Ringkasan
பிரின்ட் போட்ட படத்தை எடிட்டரின் மேசைமேல் வைத்தான் சோமப்பா.
மேஜை விளக்கடியில் அதை நகர்த்தி நன்றாகப் பார்த்தார் ஆசிரியர்.
சோமப்பாவை வாசுகி அறையும் காட்சி.
ஸ்டுடியோ லைட்டும், சூழ்நிலையும் தந்த 'பளிச்'சில் அற்புதமாக அமைந்து விட்டது அந்தப் புகைப்படம்.
“ரொம்ப வாயைக் கிண்டிட்டீங்களா?”
“நமக்கு ஒழுங்கா ஒத்துழைச்சு நாலு வார்த்தை பேசினா, நான் ஏன் சார் வம்புக்குப் போறேன்?”
“சரி என்ன பண்ணப் போறம்?”
“தீபாவளி வரைக்கும் தொடரை நீட்டுவானேன்?”
“பின்ன?”
“அடுத்த இஷ்யு ரெடியாகுது. அதுல முதல் பக்கத்துல இந்த மேட்டரைக் குடுத்து, போட்டோ போட்ரலாம். அதுக்கும் அடுத்த இஷ்யுல தொடரைத் தொடங்கிட்டா?”
“செய்யலாம்தான்.”
“இந்த போட்டோவைப் போஸ்டரா அடிச்சு, தொடர் கதைக்கு விளம்பரமா ஒட்டிரலாம். நடிகையின் சரித்திரம் தொடராக மலர்கிறதுன்னு போட்டு 'வா! சுகி! வாசுகி!'னு தலைப்பையும் பெரிசாப் போட்டுர்றது.”
அடுத்த நாளுக்கும் மறுநாள் 'சந்தனம்' பத்திரிகையில் முதல் பக்கத்தில் வெளியாகியிருந்தது வாசுகி, சோமப்பாவை அறையும் புகைப்படம், வண்ணத்தில்.
விவரம் உள்ளே என்று பக்கம் தரப்பட்டு, முழுப் பக்கச் செய்தியாக மலர்ந்திருந்தது.
'நமது நிருபர் சோமப்பாவை, படப்பிடிப்பில் பளாரென அறைந்தார் வாசுகி.'
'பத்திரிகைக்காகப் பேட்டி எடுக்கப் போன நிருபரை அவமானப்படுத்திய வாசுகி!'
'யாரானாலும் அச்சப்படாமல் நடுநிலையுடன் உண்மைகளை எழுதிவரும் ஒரே பத்திரிகை 'சந்தனம்'. அது போல வாசுகி பற்றிக் கசப்பான நிஜங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் நாம், இயல்பாகப் பேட்டிக்குப் போனோம். அங்கே நாம் அவமானப்படுத்தப்பட்டோம்.
'பத்திரிகைகளால் வளர்ந்து, உயரம் தொட்டதும் உரியவர்களை மறந்துவிடும் இவர்களைப் போன்றவர்களது முகமூடிகளைக் கிழிக்க முடிவெடுத்து விட்டோம்.'
மேற்படி நடிகையின் 'அந்தரங்க நாட்கள்' அடுத்த இதழில் ஆரம்பம். ஆதாரங்களுடன் வெளியாகும் இந்தத் தொடர், கலை உலகத்தையே ஒரு கலக்கு கலக்க வேண்டும். சோமப்பா நடிகையிடம் பட்ட அடி, அவரது முன்னேற்றத்துக்கு ஒரு படி.
ஏதோ ஒரு படப்பிடிப்பில் இருந்த வாசுகியிடம் அந்தப் பத்திரிகையை அவளது அம்மா கொண்டு வந்து தந்தாள்.
“ப்ஸ். விடும்மா.”
“விளையாடறியா வாசுகி? பத்திரிகையாளர் சங்கம், நிருபர் சங்கம் எல்லாம் சேர்ந்து உன்னை எதிர்த்து ஊர்வலம் நடத்தப் போகுதாம். நீ மன்னிப்புக் கேக்கற வரைக்கும் உண்ணாவிரதம் இருக்கப் போறாங்களாம்.
“சோமப்பா தலைவனா அதுக்கு?”
“தெரியலை. இருக்கலாம்.”
வாசுகி சிரித்தாள்.
“ஏண்டி சிரிக்கற?”
“இதைவிட எனக்குப் பிரமாதமா யாரு விளம்பரம் தர முடியும்? முதல் இடத்தைப் பிடிக்க இனி நான் கஷ்டப்படவே வேண்டாம். அதுவே தானா கிடைக்கும்.”
“இதோட சீரியஸ் உனக்குப் புரியலையா வாசுகி? அடுத்த வாரத்துல தொடர் ஆரம்பம்.”
“அதனால?”
“என்னல்லாம் எழுதப் போறானோ சோமப்பா?”
“என்ன வேணும்னாலும் எழுதட்டும். சோமப்பா எழுதறதெல்லாம் அரசியல் சட்டமா இல்லை இதிகாசங்களா?”
“ஷாட் ரெடி மேடம்.”
எழுந்து போனாள் வாசுகி அலட்சியமாக.
Ulasan
Tulis ulasan anda
Ingin mengulas e-book ini? Silah Sign in untuk memulai ulasan anda.